இந்த வலைப்பதிவில் தேடு

நான் கடந்து வந்த பாதை.

நண்பர்களே,

என் முந்தய பதிவுகளை படித்ததும் ஒரு கதை படித்தது போன்ற உணர்வு ஏற்பட்டதா?

ஆச்சரியமொன்றுமில்லை. சில சமயம் நானே அப்படி உணர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையே ஒரு சுவாரசியமான கதை போல் தான் இருக்கிறது.

தொடர்ந்து என் அனுபவங்களை படித்துவருவீர்களேயானால், நிழல்....நிஜமாகும்....என் அனுபவங்கள் உங்கள் கண்களை மறைக்கும் மாயத்திரையை இற்று விழச்செய்யும். உண்மையின் தரிசனம் ஒரு நாள் உங்களுக்கும் கைகூடும். கைகூடவேண்டும் என்பது என் பிரார்த்தனை!

பூமியில் கண்ணன், ராமன், ஏசு வாழ்ந்த போது, அவர்களை உண்மையாக அறிந்தவர்கள் மிகச்சிலரே.

பிரபஞ்ச சக்தி மானுடத்தின் உறக்கம் கலைக்க எண்ணி உடலெடுத்து மண்ணில் கால்பதிக்கும் போது அதை இனம் காணுவது மிகச்சிரமம். இனம் கண்டுகொண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்றே கொள்ள வேண்டும். இது சம்மந்தப்பட்ட ஆனந்த ஜோதியின் பாடல் வரிகள்
என் நினைவுக்கு வருகிறது.

"வானிலிருந்தால் வாவென்றழைப்பதும்,
வையகம் வந்தால் இனம் காண மறுப்பதும்
மானுடமைய்யா, மாறுதல் இல்லை"

யதார்த்தத்தின் இயலாமையை தோலுரித்துக்காட்டும் வரிகள்!

மண்ணில் வாழ்ந்த அந்த மஹா சக்தியின் பிரதிகள் (இறை தூதர்கள் எனவும் கொள்ளலாம்) எந்த மதத்தையும் தோற்றுவிக்கவில்லை. மதத்தைத்
தோற்றுவித்தவன் மதம் பிடித்த மனிதன் தான். எனவே நான் எந்த மதத்தையும் சார்ந்தவனில்லை. என் குரு அழைத்தபோது சம்மதித்து அவர் பாதையில் நடப்பதால் எனக்கு எம்மதமும் சம்மதமே!

மதத்தைச் சார்ந்திருப்பதும் ஒரு நிலையே. உதாரணத்துக்கு சொல்வோமானால்; ஆறாம் வகுப்பு மாணவனுக்கு பத்தாம் வகுப்பு மாணவனின் கணக்குப் பாடம் புரியாது. அது அவன் தவறல்ல. அவன் கற்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது என்பது தான் உண்மை. எனவே மதத்தைச் சார்ந்திருப்பதும் ஒரு நிலைதான். அதையும் கடக்கவேண்டும். யோக சாதனை அதற்கு உதவும்.

நான் இரண்டு வலைத்தளங்களை உருவாக்கினேன். முன்பே இருந்த ஒன்றையும் சேர்த்து மூன்று வலைத்தளங்களை நான் நிர்வகித்து வருகிறேன். அவை: http://ourguru.net/, http://anandjothi.info/, http://anandavallal.com/.

முன்னணி வலைத்தளங்களைப் போல் ஆயிரமாயிரம் பார்வையாளர்கள் இந்த வலைத்தளங்களைக் காண வேண்டும் என்பது என் நோக்கமல்ல. யாருக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறதோ அவர்கள் இங்கே வருவார்கள் என நான் அறிவேன். அது இறைவனின் பொறுப்பு. இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றே நினைக்கிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இறை தேடலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதும் அல்லது விலகிச்செல்வதும் அவரவருடைய ஆர்வம் அல்லது ஆர்வமின்மையைப் பொருத்தது.

ஒவ்வொரு ஆன்மாவும் தன்  தொடர் பயணத்தில் என்றாவதொரு நாள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிச்சயமாக மேலே வரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

இந்த தளத்தில் நான் நிறைய எழுதப்போகிறேன். நான் கடந்து வந்த பாதையில் எனக்கேற்பட்ட அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், எண்ணங்கள், உணர்வுகள், மகிழ்ச்சிகள், வலிகள், பாதையில் ஏற்பட்ட தடைகள், அவற்றை தகற்றெறிந்து பாதையில் பயணிக்கும் ரகசியம் போன்ற எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

வாழ்க்கையின் பெரும் பகுதியை தேடலில் கழித்த எனக்கு, என் போன்ற தேடலில் முயல்வோருக்கு உதவ எண்ணும் என் முயற்சிதான் இந்த வலைத்தளங்கள்.

நான் சார்ந்திருக்கும் ஆனந்த்ஜோதி அமைப்பு வியாபார நோக்கம் கொண்டதல்ல. நூறு சதவிகிதம் ஆன்மிக ஊக்குவிப்பு தான் எங்கள் நோக்கம், செயல்பாடு எல்லாம். பணம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.  இங்கே எதிர் பார்ப்பற்ற உதவி கிடைக்கும். முயன்று பாருங்கள். தொடர்புக்கு வலைத்தளங்களில் மின்னஞ்சல் முகவரிகளும், தொலபேசி எண்களும் உள்ளன.

என்போன்று ஆன்மிக தாகத்தில் தவிப்போர்க்கு ஓரளவாவது உதவ முடிந்தால் அதை என் பாக்கியமாக கருதுவேன்.

மீண்டும் தொடர்வேன்.

கேசவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக