இந்த வலைப்பதிவில் தேடு

தேடலில் துவங்கி….விடியலை நோக்கி…பாகம் 2

விடியலைத் தேடி தொடரின் இரண்டாம் பாகம்....

1996 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 31ம் நாள். இருள் விலகாத நேரம். சுமார் 4.30 மணி அளவில்,இரண்டுகார்களில் ஒன்பது பேர் குறடுமலை நோக்கிப் பயணமானோம்.பெங்களூர் நெடுஞ்சாலையை சுமார் 70 கி.மீ. வேகத்தில் விழுங்கிக்கொண்டு இரண்டு கார்களும் விரைந்துகொண்டிருந்தன. வெளியில் படர்ந்திருந்த இருள் எங்கள் மனத்தையும் ஆக்கிரமித்திருந்தது. ஆதவன் வந்தால் வெளியிருள் விலகும். டாக்டர் வந்தால் எங்கள் மன இருள் விலகும். குருநாதனின் திருமுகத்தைக் காணும் நாளை எண்ணி மனம் ஏங்கியது.


நினைத்தால் பார்த்துவிடமுடியும் என்று இருந்த போது நாளை பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிப்போட்டதும் இந்த மனம்தான். அவர் யாரென்று நான் அறியாத போது உடனிருந்தார். தெரிந்தபோது பிரிந்துவிட்டார். கண்களை மூடி இருக்கையில் சரிந்தபோது, மனம் கடந்த கால நினைவுகளில் தோய்ந்தது.

1995 ம் ஆண்டு ஜூலை 3ம் நாள் எங்கள் குருநாதனின் திருமேனியைத் தாங்கிய பெட்டியை சவக்குழிக்குள் இறக்கிவிட்டு பாறைபோல் கனத்த இதயத்துடனும், ஆற்றாதழுத கண்ணீருடனும் வீடு திரும்பிய போது, 'என் குருவுக்கும் மரணமுண்டா? நடந்தது உண்மை தானா? இது பிரமையல்லவே! இறைவன் தானே சத்குருவாகவும் வருகிறான்; அவ்வாறாயின் இறைவனுக்கும் மரணமுண்டா? இது எப்படி சாத்தியம்' எனப் பல விடை கிடைக்காத கேள்விகள் மனதை ஆக்கிரமிக்க, பதில் தேட விழைந்த போது, டாக்டரின் சீடர்களில் ஒருவரான ஷோபனாரவி உண்மையின் ஒரு பொறியை என் இதயத்தில் விதைத்து அதை ஊதி... ஊதி, கனிந்து....கனன்று எழவைத்து, அந்த உண்மைத் தீயில் என் கேள்விகளையெல்லாம் எரித்துவிட்டார். மெள்ள மெள்ள மொட்டு இதழ் விரிவது போல என் குழம்பியிருந்த மனத்தில் தெளிவு என்னும் நீரூற்று மெள்ளக் கசிந்து, பெரும் வெள்ளமாய் பெருகியது. என் குருநாதன் என்னைத் தனியே தவிக்க விட்டுப் போனானே என்ற எண்ணம் நீங்கி, குழப்பம் தீர்ந்த மனத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக நீண்ட கரத்தில் என் கரத்தைப் பதித்தேன். இனி அன்னையவள் வழி நடத்துவாள் என்ற நம்பிக்கையுடன், அவள் காட்டும் பாதையில் கேள்விகள் தீர்ந்த நிலையில் என் பயணம் தொடர்கிறது.

நம் குருநாதனுக்கு மரணமேது? 'உலகில் அதர்மம் அதிகரிக்கும் போது, நல்லவர்களைக் காத்து, துஷ்டர்களை அழிக்கும் பொருட்டு, யுகங்கள் தோறும் வருவேன்' என்று கூறிய கண்ணனுக்கு மரணமேது? 'நான் மீண்டும் வருவேன்; தீயவர்களை அழித்து, நல்லவர்கள் பொருட்டு பரலோக சாம்ராஜியத்தை இங்கே நிறுவுவேன்' என்று கூறிய நித்திய ஜீவர் ஏசுபிரானுக்கு மரணமேது? நம் குருநாதர் இன்றும் அதே உடலுடன்தான் ஜீவிக்கிறார். அழிவின் விளிம்பை நோக்கி வேகமாக நடை போடும் இந்த உலகைக் காக்கும் பொருட்டு அவர் நடத்தும் ஒரு பெரிய நாடகத்தின் ஒரு பகுதி தான் இது. அவர் கருவாசம் செய்து உடலெடுத்துப் புவியில் இறங்கியதும், நம்மையெல்லாம் ஒன்று சேர்த்ததும், இன்று ஸ்கூட்டர் விபத்தில் தவறிவிட்டவர் போல் ஒரு பிரமையை ஏற்படுத்திவிட்டு மறைந்து வாழ்வதும், அவர் நடத்தும் நாடகத்தின் ஒரு பகுதி தான். நாடகத்தின் முடிவில் உண்மை விளங்கும். உலகறிய மீண்டும் டாக்டர் நித்யானந்தமாகவே வெளிவந்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டி, நம்மையெல்லாம் பிறவித் தளையினின்று விடுவித்து, வானுலகம் அழைத்துச் செல்வது உண்மையில் நடக்கப் போகின்றது. எனவே, நம்பிக்கையுடன் வாருங்கள் நம் குருநாதனைத் தேடுவோம் என அழைத்தார். சாதாரண மனிதர்களின் பார்வையில் இது சித்தசுவாதீனமிழந்தவர்களின் பேச்சாகத் தோன்றும். அசாதாரணமான குரு! அவர் சீடன் என்பதால், நானும் சாதாரணமானவன் இல்லை.

தொடரும்.........

கேசவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக