விடியலைத் தேடி தொடரின் மூன்றாம் பாகம்....
குருவின் அருளால், இங்கொன்றும் அங்கொன்றுமாக, அவர் விட்டுச் சென்ற ஆதாரங்களையும், பேச்சுவாக்கில் சொன்ன சொற்களையும், செய்திகளையும், குறிப்புகளையும் கொண்டு கிடைத்த ஊகத்தின் படி, முதலில் அந்தர் கங்காவில் (கோலாருக்கு அருகில் இருக்கிறது) தேடக் கிளம்பினோம். அங்கே இருக்கும் ஒரு காட்டிலாக்கா அதிகாரி (Forest Ranger) கிருஷ்ணப்பா என்று பெயர், டாக்டர் மூன்று நாட்கள் அங்கு தங்கிச் சென்றதாகக் கூறினார். டாக்டரின் புகைப் படத்தைக் காட்டிக் கேட்டபோது, சந்தேகத்துக்கிடமில்லாமல், 'இவர் தான்' என்று சொன்னார். அன்று தொடங்கி, காடு, மலை, திருத்தலங்கள், மஹான்களின் சமாதிகள், டாக்டர் பிறந்த இடம், வளர்ந்த இடம், எனப் பல இடங்களில் எங்கள் தேடுதல் யக்ஞம் தொடர்ந்தது. அவற்றில் டாக்டரை நேரில் கண்டதாக உறுதியாகச் சொன்னவர்களின் அனுபவங்களில் சிலவற்றை மட்டும் இங்கே தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அனைத்து அனுபவங்களும் இந்தத் தொடரில் வரும். பொறுமை காத்தால் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
தேடுதல் யக்ஞத்தின் இரண்டாம் முயற்சியாக, கம்பம், தேனிக்கு அருகிலிருக்கும் சுருளியாறு என்னும் நீர்வீழ்ச்சியிருக்கும் காட்டுப்பகுதியில் எங்கள் தேடல் தொடர்ந்தது. காய், கனி, திராட்சை, வாழைத்தோட்டங்கள், தென்னந்தோப்புக்கள் நிறைந்த அந்த அழகிய சூழலில், அருவியின் அருகே தேடிய போது, அங்கு வசிக்கும் வாலிபர் அர்சுனன் என்பவரிடம் டாக்டர் போட்டோவைக்காட்டி, 'சமீபத்தில் இவரை இங்கே யாராவது பார்த்திருக்கிறீர்களா' எனக் கேட்டோம். எங்கள் நம்பிக்கைக்கு உரமிடும் வகையில், சற்றும் தயங்காமல், “பார்த்திருக்கிறேன்” என்ற பதில் வந்தது. மேலும் பேசுகையில், “இவருடன் மற்றொருவரும் வந்தார், அவர் சிவந்த நிறத்தில், குள்ளமாக, காவியுடையணிந்து, ஜடாமுடியுடனும், தொப்பையுடனும் இருந்தார். இந்தப் புகைப்படத்தில் இருப்பவர், ஒல்லியாக, உயரமாக, வேட்டிச் சட்டை அணிந்து, தோளில் ஜோல்னா பை மாட்டியிருந்தார். இருவரும் மேலே காட்டுப் பகுதிக்குச் சென்றார்கள். கையில் உணவு ஏதும் எடுத்துச் செல்லவில்லை” என்று சொன்னார். இது கழிந்து, ஒரு வாரத்திற்குப் பிறகு, அர்சுனன் காட்டுக்கு வேட்டைக்குப் போன போது இவர்கள் இருவரையும் அடர்ந்த வனப்பகுதியில், ஒரு நீரோடைக்கு அருகில் பார்த்தாராம். குள்ளமாக இருந்தவர் நீரோடையில் நீராடிவிட்டு வந்துகொண்டிருந்தாராம். டாக்டர் சற்று மேலே, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தாராம். குள்ளமாக இருந்தவர், அர்ஜுனனையும் அவர் நண்பரையும் நலம் விசாரித்தாராம். அதற்குப் பிறகு இருவரையும் மீண்டும் பார்க்கவே இல்லையாம். டாக்டரின் புகைப்படத்தைக் காட்டி, உயரமாக இருந்தவர் இவர் தான் என உறுதியாக சொன்னார். இது சத்தியத்துக்குக் கிடைத்த இரண்டாம் சாட்சி. இதற்கடுத்து, நண்பர் அனந்துவும் நானும், புத்தூருக்கு அடுத்த, திருப்பதி செல்லும் பாதைக்கருகே இருக்கும், ‘சதாசிவக் கோனே’ எனும் மலையிலிருக்கும் கோவிலுக்குச் சென்றோம். ஓரளவு அடர்ந்த காட்டிடையே சுமார் ஐந்து மணி நேரம் பயணம் செய்து, கோவிலை அடைந்த போது, அங்கே தங்கி தவம் இயற்றும் இரு சன்யாசிகளை சந்தித்தோம். அங்கே ஒரு மஹானின் சமாதி இருக்கிறது. அழகிய நீர்வீழ்ச்சிக்கருகில் அன்னை பராசக்திக்கு ஒரு அழகிய கோவில். மிக ரம்யமான சூழல். அங்கிருந்து அரை பர்லாங் தூரத்தில் மற்றுமொரு சிவன் கோவிலும் நீர் வீழ்ச்சியும் இருக்கிறது. பராசக்தியின் கோவிலுக்கருகில் குடில் அமைத்து தவமியற்றும்அந்த இரு சன்யாசிகளிடம் டாக்டரின் புகைப்படத்தைக் காட்டி, 'இவரைப் பார்த்திருக்கிறீர்களா?' என வினவினோம். “இவர் இங்கே வந்திருந்தாரே, ஒரு நாள் மதியம் சமாதிக்கருகில் தியானத்திலிருந்த இவரை அழைத்து உணவு பறிமாறி உபசரித்தோம்” என்றார். ஒரு வேளை மட்டும் உணவு உண்ணும் பழக்கம் உள்ள இவர்கள், மதிய உணவுக்கு முன், யாராவது வந்திருக்கிறார்களா எனப் பார்த்து, அவர்களுக்கு உணவு அளித்து, அதன் பின் உணவருந்தும் பழக்கம் உள்ளவர்களாம். எங்களிடம் இருந்த புகைப்படத்திலிருந்த டாக்டரைப் பார்த்து, “இங்கே வந்திருந்தது இவர் தான். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என்றார்.
தொடரும்....
கேசவன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக