இந்த வலைப்பதிவில் தேடு

தேடலில் துவங்கி….விடியலை நோக்கி…பாகம் 5

விடியலைத் தேடி தொடரின் ஐந்தாம் பாகம்....

அந்த மலை மீது நிறுவப்பட்டிருக்கும் சிலுவையானது, 1939 ம் ஆண்டு, மதுரையைச் சேர்ந்த ஒருவர், தன் மனக்கண்ணால் (அகக் காட்சி) பார்த்து, இந்த இடத்தைத் தேடி கண்டுபிடித்து இந்த சிலுவையை நிறுவினாராம். இந்த குன்றிற்கு ஈஸ்டர் ஹில் என்று பெயர். இதில் நாம் நினைவு கூரத்தக்க முக்கியமான செய்தி என்னவென்றால், டாக்டர் பிறந்த ஆண்டும் 1939 தான். என்ன ஒற்றுமை! அந்த இடத்தை விட்டகலும் போது, தாயைப் பிரியும் சேயைப் போல கனத்த மனதுடன் பயணத்தைத் தொட்ர்ந்தோம். தேவனின் பாதம் பதிந்த இடம். அவன் பாதம் போன பாதை தெரியாமல் மனம் தவித்தது. குறடு மலை கோவிலை அடைந்தோம். அங்கு நான்கு யுகங்களாக மோனத்தவத்தில் வீற்றிருக்கும் தும்பிக்கையாழ்வாரை தரிசித்துவிட்டு, அந்தர் கங்காவுக்குப் புறப்பட்டோம்.

அந்தர் கங்காவில் மதிய உணவருந்தியப் பின் அங்கிருந்து கோலாருக்கருகிலிருக்கும் மாரிக்குப்பம் நோக்கிப் பயணமானோம். மாரிக்குப்பம் சிவாலயத்தில் சிறிது நேரம் தியானம் செய்து சிவசக்தியின் அன்பில் நனைந்த பின் அருகிலிருக்கும் ஒரு விஷ்ணு விக்ரகத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இந்தச் சிலையின் பின்னே ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது. டாக்டர் கோலாரிலிருந்த சமயம், தன் துணைவியாருடன் இந்த சிவாலயத்துக்கு வந்த போது, வெண்ணிற புஷ்பத்தை சிவனுக்கு சார்த்தக்கூடாது என்பதைக் கேட்டு, கையிலிருந்த வெண் மலர்களை வீசி எறிந்தாராம். அம் மலர்கள் விழுந்த இடத்தில், அவை தானே அசைவதைக் கண்ட டாக்டர், அங்கிருந்த சிறுவர்களை அழைத்து, அவ்விடத்தைத் தோண்டச் செய்தாராம். மண்ணுக்கடியில் இவ் விக்ரகம் இருக்கக் கண்டு, அதை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்தாராம். இபோது அதைச் சுற்றி கருங்கல் பலகைகளால் சுவரும் கூரையும் வேயப்பட்டுள்ளது. பூசை நடப்பதற்கான அறிகுறிகளும் தெரிந்தன. நட்டக் கல் பேசுமோ என்னவோ! ஆனால் கூத்தன் அருகிலிருந்தால், தரையில் விழுந்த மலர்களும் கூத்தாடும் என்பது புரிந்தது.

இருட்டிய நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு, இரவு குறடு மலை வந்தடைந்தோம். இரவு, கோவில் பிரகாரத்தில் தங்கினோம். இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது. இதை அவசியம் குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன்.

இரவுச் சாப்பாடுக்கு, நாங்கள் கொண்டுவந்திருந்த உணவு ப் பண்டங்களில், கொஞ்சம் சப்பாத்தியும், கொஞ்சம் தயிர் சாதமும், சிறிது புளியோதரையும் மிச்சமிருந்தது. தயிர் சாதப் பாத்திரத்தைத் திறந்ததும் அதுவும் புளியோதரையுடன் போட்டியிடுவதை நாசி உணர்த்தியதும் திருமதி ஷோபனா ஒரு கரண்டியை எடுத்தார்கள். புளியாய் மாறிவிட்டிருந்த அந்தத் தயிர் சாதத்தில் விட்டு ஒரு கலக்குக் கலக்கினார்கள்; பிறகு அதிலிருந்து எல்லோருக்கும் ஒரு கரண்டி சாதம் இலையில் இட்டார்கள். நான் புளிப்பு, காரம், உப்பு அனைத்தும் மிகக் குறைவாக சாப்பிடும் பழக்கமுள்ளவன். என் இலையிலும் ஒரு கரண்டி சாதம் விழுந்தது. தயக்கத்துடனேயே சிறிதளவு எடுத்து வாயிலிட்ட நான், ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஸ்தம்பித்துவிட்டேன். புளிப்பு அறவே இல்லை. தயிர் சாதம் அப்படி ஒரு ருசி! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என ஒரு வாக்கியம் உண்டு. இந்த அனுபவம் தந்த இன்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மீண்டும் மகிழ்கிறேன்.

மறு நாள் புறப்பட்டு, சித்தூர் வழியாக திருப்பதி சென்று, சீனிவாசமங்கா புரத்திலிருக்கும் பெருமாளை தரிசித்துவிட்டு, மேலே சென்று ஆகாச கங்கா, பாப வினாசனம் தீர்த்தங்களைப் பார்த்துவிட்டு, இரவு சுமார் பத்து மணி அளவில் வீடு திரும்பினோம்.

அன்று அந்த பயணம் மீண்டும் ஒரு முறை டாக்டரைக் காணாத ஏக்கத்தில் முடிவுற்றது.

தொடரும்....

கேசவன்

1 கருத்து: