இந்த வலைப்பதிவில் தேடு

தேடலில் துவங்கி….விடியலை நோக்கி…பாகம் 4....

விடியலைத் தேடி தொடரின் நான்காம் பாகம்....

இதே கால கட்டத்தில், டாக்டரின் சிஷ்யை, மைதிலி என்று பெயர், அவர் ஒரு நாள் நர்சிங்ஹோமில் அவர் கணவரைக் காணச் சென்ற போது, லிஃப்டில் டாக்டரும், அவருடன் வெள்ளையுடை அணிந்திருந்த ஒரு பெண் கையில் ஒரு புத்தகத்துடன் ( பார்ப்பதற்கு பைபிள் போல் இருந்தது என்பது இவர் ஊகம்) நிற்பதைக் கண்டு ஆச்சரியத்தில் வாயடைத்து நிற்கையில், லிஃப்ட் தளத்தில் வந்து நின்று கதவு திறந்து கொண்டதாம். தன்னை ஒரு வழியாகச் சுதாரித்துக் கொண்டு, டாக்டருக்கு நமஸ்காரம் சொல்லிவிட்டு, கணவர் அறையில் இருக்கும் தன் பெண்ணை அழைத்து வந்து டாக்டரைக் காட்ட எண்ணி, மகளை அழைத்து வருவதற்குள் டாக்டர் அந்த வராண்டாவில் (corridor) சென்று மறு முனையில் திரும்பினாராம். ஓடிச் சென்று பார்த்தால், டாக்டரையும் அந்த மாதையும் காணோமாம். தான் டாக்டரைப் பார்த்தது மனித உடலில் தான். மனக்கண்ணில் தோன்றும் அஹக்காட்சி (VISION) அல்ல என்று ஆணித்தரமாக சொல்கிறார். இதை இவர் மகள் ஷோபியும் பார்த்திருக்கிறார். இவை அனைத்தும் 1996 ல் நிகழ்ந்தவை. விபத்துக்கு முந்தைய வருடங்களில் பல முறை, பல சந்தர்ப்பங்களில், தான் 1996 ல் வெளி வருவேன் என டாக்டர் சொல்லியிருக்கிறார். அந்த சொல் உண்மையானதற்கு மேற்கூறிய நிகழ்வுகளை ஆதாரமாகக் கொள்ளலாம்.


இது தவிர, கிளினிக்கில் இருந்த போது ஒரு நாள் டாக்டர், இரு கைகளையும் உயரத் தூக்கிக் கொண்டு, “31 ஜனவரி, 1997 ல் நான் ‘FREE BIRD’ (நான் சுதந்திரப் பறவை)” எனச் சொல்லியிருக்கிறார். இப்படி டாக்டர் சொன்னதை அவர் வேலையிலிருந்து ஓய்வு பெறுவதை சொல்கிறார் போலும் என எண்ணிவிட்டார்கள். ஆனால் அவர் சொன்னதன் பொருள் இப்போதல்லவா புரிகிறது! என் மனம் நிகழ் காலத்துக்குத் திரும்பியது. அவர் ‘நான் சுதந்திரப் பறவை’ என்று சொன்ன ஜனவரி 31 ம் நாள் இன்றுதான் என்று உணர்ந்த போது அந்த ஞானப் பறவையைத் தரிசிக்கும் பாக்கியம் இன்றாவது கிட்டுமா என மனம் ஏக்கத்தில் மூழ்கியது. அன்று மேற்கொண்ட பயணத்திற்கு மற்றும் ஓர் காரணமும் இருந்தது. 1983 ம் ஆண்டு, குறடு மலையிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த போது ஒரு சிறிய குன்றை சுட்டிக்காட்டி, 'இந்த இடத்துக்கு ஜீசஸ் வருவார்' என டாக்டர் கூறியதை திருமதி ஷோபனா நினைவு கூர்ந்தார்கள். அந்த மலையின் மேல் ஒரு சிலுவை இருந்ததாம். அந்த மலையையும், சிலுவையையும் பார்த்துவிட்டு, குறடு மலை, அந்தர் கங்கா, மாரிக்குப்பம் சிவன் கோயில், திருமலையிலிருக்கும் ஆகாச கங்கா தீர்த்தம் என ஒரு பெரிய டூர் ப்ரோகிராமுடன் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் இவ் வேளையில், டாக்டரைப் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை அதிகமாக இருந்தது. சித்தூரைத் தாண்டியதும் எங்கள் அனைவரின் கண்களும் சாலையின் இரு மருங்கிலும் உள்ள சிறு குன்றுகளை அலசிக்கொண்டு வந்தன. தேடிய குன்றும், சிலுவையும் கண்ணில் பட்டன. பெரிய சிலுவை, சாலையின் அருகேயுள்ள குன்றின் உச்சியில்! காரை நிறுத்திவிட்டு மேலேறிச் சென்றோம். அங்கே நிறுவப்பட்டிருந்த சிலுவையின் பீடத்தில் 1939 எனப் பொறிக்கப் பெற்றிருந்தது. அருகில் ஒரு சிறிய மண்டபம். அதில் அமர்ந்து தியானம் செய்தோம். அங்கிருந்து பார்த்தால், குன்றின் மறு பக்கத்தில் சிறு கிராமம். அதில் ஒரு தேவாலயம். அந்த கிராமத்திற்குச் செல்ல குன்றைச் சுற்றி ஒரு மண் பாதை சென்றது. அந்தத் தேவாலயத்தை திறக்கச் செய்து, உள்ளே சென்று தியானம் செய்தோம். அங்கே விசாரித்ததில் கிடைத்த ஒரு அரிய செய்தி.

தொடரும்.....

கேசவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக