இந்த வலைப்பதிவில் தேடு

தேடலில் துவங்கி….விடியலை நோக்கி…

தேடலில் துவங்கி, விடியலை நோக்கிச் செல்லும் இந்த வாழ்க்கையில் பெறப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைவது தான் இந்தத் தொடரின் முக்கிய நோக்கம். மானுடப் பிறவி கிடைப்பதென்பது மிக அரிது. அப்படிக் கிடைத்தால், அதன் நோக்கமே தேடலைத் தொடர்வதற்காகத்தான். தேடல்கள் பல. தேடல்களிலேயே மிக உயர்ந்தது ஆன்மிகத் தேடல் தான். இதுவரை விடை காண முடியாத பல கேள்விகளுக்கு விடை காணும் நோக்கத்தில் துவங்கியது தான் தேடல். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், துவங்கிய இடத்தை அடைவது தான் இந்தத் தேடலின்விடியல். தப் பிறவியில், சிந்திக்கத் தெரிந்த நாள் முதல், இதுவரை பலரால் விடை காணமுடியாத மிகப்பழைய கேள்விகளுக்கு விடை காணத் துணிந்து ஆரம்பித்த பயணம் தான் என் தேடல். இன்று என் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்துவிட்டதா என்றால், ஆம், இல்லை என்ற எதிர்மறை பதில்களைத்தான் சொல்ல வேண்டும். பதில்களின் மொத்த உருவமாக என் குருநாதன் வந்த பிறகு, இப்போதென்ன அவசரம் பதில்களைத் தெரிந்து கொள்ள? கேள்விகளும் இருக்கட்டும்,பதில்களும் இருக்கட்டும். அவகாசம் கிடைக்கும் போது பார்த்துக் கொள்ளலாம். இன்னும் எவ்வளவு வேலை மீதமிருக்கின்றது....இன்னும் எத்தனை ஆன்மாக்கள் கரை ஏற துடிக்கின்றன.....அவற்றின் கூக்குரலைக் கேட்டுத்தானே குருநாதன் கீழிறங்கி வந்தான். அந்தக் குரல்களில் என் குரலும் ஒன்றல்லவா? அப்படிப்பட்டவர்களை கரை ஏற்றிவிடும் அரிய பணியைச் செய்து கொண்டிருக்கும் குருநாதனுக்கு மிகச் சிறிய அளவிலாவது உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் வேரூன்றியிருப்பதால் என் கேள்விகளுக்கான பதில்களுக்கு அவசரமில்லை என எண்ணுகிறேன். 1994 ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் அவரைச் சந்தித்தேன். அதே மாதம் 24 ம் தேதி தீட்சை பெற்றேன். அன்று மீண்டும் பிறந்தேன். இந்தத் தொடரின் வாயிலாக எப்படியிருந்த நான் எப்படி மாற்றப் பட்டேன், அந்த மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதைக் கூறுவது மட்டுமல்லாது, காலத்தின் கட்டாயத்தால் எங்களைப் பிரிந்து வாழும் குருவைத்தேடி நாங்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களையும் விவரிப்பது தான் என் நோக்கம். இந்தத் தொடரில், டாக்டர் நிகழ்த்திய பல அற்புதங்களைப் பற்றி எழுதவிருக்கிறேன். ஆனால், அவர் நிகழ்த்திய அற்புதங்களிலெல்லாம் மிகப் பெரிய அற்புதம் என்னுள், மற்றும் அவருடைய சீடர்கள் அனைவருக்குள்ளும் அவர் நிகழ்த்திய மாற்றம் தான் என்பதை இங்கே அவசியம் சொல்ல வேண்டும்.


இந்த தொடரை நான் ஏற்கனவே எழுதி வாய்ஸ் ஆஃப் ஆனந்த ஜோதி யில் வெளிவந்த ஒரு கட்டுரையுடன் தொடங்குகிறேன். இதைப் படியுங்கள். சிறு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தொடர்ந்து எழுதுவேன்

கேசவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக