உறவுகள் சுமையாகிப் போவது எப்போது. எதிர்பார்ப்பு என்பது முளைவிட ஆரம்பிக்கும் போது தான். அடுத்தவர் விருப்பத்திற்காக ஒன்றைச் செய்யவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படும் போது தான்.
இயல்பிலேயே சுதந்திரமாக கட்டற்றிருந்த ஆன்மா, உயிர், ஜீவன்; ஆத்மா, பரமாத்மா; எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளூங்கள். என்ன சொல்லி அழைத்தாலும் அது அதுவாகத்தான் இருக்கும் ஷேக்ஸ்பியர் சொன்னது போல: "call it by any name, rose smells the same". என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் ரோஜாவின் மணம் மாறாது என்பது போல. மாற்றமில்லாத 'அது' மனம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டதும் மாற்றத்துக்கு உட்படுவது போல் மாய தோற்றமளிக்கிறது. மாற்றம் என்பது மனம் சார்ந்தது. தேவைகள், ஆசை, பாசம், விருப்பம், வெறுப்பு, கோபம், இன்பம், துன்பம், காமம், சுகம், துக்கம், இவை அனைத்தும் மனம் சார்ந்தவை. எனவே இவை மனத்தில் தான் இருப்பு கொள்கின்றன. எனவே சுமை என்பது மனத்துக்குத்தான். மனத்தை விட்டு மேலே செல்லும் வித்தையைக் கற்றுக்கொண்டால், சுமை விலகிப் போகும், ஆனந்தம் ஆட்கொள்ளும்.
ஒரு பாத்திரம் ஏற்று நடிக்க வந்த பிறகு, நடிப்பதில்தான் கவனமாக இருக்க வேண்டும். பாத்திரமாகவே மாறிவிடக்கூடாது. பாத்திரமாகவே மாறிவிட்டால், நாடகம் தொடர்ந்துகொண்டுதானிருக்கும், தற்கால 'மெகா' தொடர் போல. 'இது நாடகம்' என்னும் உணர்வு எப்போதும் மனதில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது தான் விழிப்புணர்வு. இந்த விழிப்புணர்வு எப்படி சாத்தியமாகும்? இடையராத தியானத்தின் மூலமும், அடிக்கடி நமக்கு நாமே நினைவுறுத்திக் கொள்வதன் மூலமாகவும் இதை கையாளலாம். கதி ஒன்றுதான் காப்பாற்றும். இது நாடகம் என்பதை நினைவூட்டும். எந்த மனம் ஆத்மாவில் லயிக்க விடாமல், அதைவிட சுகம் இதோ நான் தருகிரேன் என்று ஏமாற்றி நம்மை (நம்மை என்று நான் குறிப்பிடுவது, வினைப்பயன்களால், வாசனைகளால் உருவான ஆணவத்தைத் தான். ஆணவம் தான், ஆன்மாவிலிருந்து பிரித்து தன்னை தனியாக அடையாளம் காண முற்படுகிறது) பந்தத்தில் கட்டிப்போடுகிறதோ, அந்த மனத்தையே உபயோகப்படுத்தி அதனிடமிருந்து விடுதலை பெரும் வழியை நமக்கு காட்டுவது தான் வாசி யோகம். முள்ளை முள்ளால் எடுப்பது போல், மனதை மனதால் தான் அழிக்க வேண்டும். முள்ளை எடுத்த்தும் எடுக்க உதவிய முள்ளையும் வீசி எறிவது போல, அழிக்க உதவிய மனத்தையும் அழித்துவிட வேண்டும். அந்த வேலையையும் அந்த மனமே செய்துவிடும். காரணம் ஒரு கால கட்டத்தில், ஒரு நிலையில் அது தன் செயல்களால் சலித்து ஒய்ந்துவிடும். அப்போது தான் அது தன்னையே அழித்துக்கொண்டு, இதுகாறும் தன்னால் மறைக்கப்பட்டிருந்த ஆன்மாவின் விடுதலைக்கு வழிவிட்டு தன்னையே அழித்துக்கொள்கிறது.
அணு ஆயுதங்களைவிட சக்திவாய்ந்த மனத்தை வெல்ல நம்மிடமிருக்கும் ஒரே ஆயுதம் 'வாசி' ஒன்றுதான்.
பரம்பொருளிலிருந்து பிரிந்து என்ன காரணத்துக்காகவோ பூமியில் பிறவியெடுத்துவிட்ட ஒவ்வொருஜீவனும் ஒரு நாள் நிச்சயம் விடுதலை பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அந்த நாடைமுறையை எப்படி துரிதப்படுத்துவது என்பதைத்தான் குருநாதன் மூலம் இயக்கிவைக்கப்பட்ட வாசியோகம் நமக்கு போதிக்கிறது. பிறவி எடுத்ததும் உறவுகளில் சிக்கிக்கொள்ளும் ஆணவம், அதை மேலும் மேலும் வளர்த்துக்கொள்கிறது. பிறவிதோறும் அது பெறுக்கம் கொள்கிறது.
சங்கிலித்தொடர் போன்ற உறவுகளிலிருந்து அந்த உறவுகளும் பாதிக்கப்படாமல் எப்படி விடுபடுவது? அதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது. குருநாதர் சொல்லியிருக்கிறார்,"பாசம், பந்தப்படுத்தும்; அன்பு விடுவிக்கும்" என்று. அது தான் தீர்வு. சுலபம் என்று நான் சொல்லவில்லை. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்கிரேன். முதலில், பாசத்திற்கும், அன்புக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரே வரியில் இதற்கு விளக்கம் சொல்லவேண்டுமானால், பாசத்தில் எதிர்பார்பு இருக்கும். அன்பில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மிக உயர்ந்த்தாக கருதப்படும் தாய்ப்பாசத்தில் கூட எதிர்பார்ப்பு இருக்கிறது என்று கூறுவேன். "இவனை வளர்த்து ஆளாக்கினால்,என் கடைசி காலத்தில் இவன் என்னைக் காப்பற்றுவான்" என தாய்மார்கள் பேச்சுவழக்கில் கூறுவதை கேட்டிருப்பீர்கள். பாசத்தின் அடையாளம் அதுதான். அன்பில் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. தேவையான நேரத்தில தேவையானதை கொடுக்கும். அன்பு தராதரம் பார்ப்பதில்லை, அன்பிற்கு ஏழை- பணக்காரன் இல்லை. படித்தவன் - அறிவிலி என்ற பேதமில்லை. ஆதவனின் ஒளியைப் போல் அது எல்லோருக்கும் கிடைக்கும். அதற்கு விலைதர வேண்டாம். பாசத்திற்கு விலை தர வேண்டும். சரி, விளக்கம் போதும். இதை எப்படி செயல்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.
முதல் படியாக, யாரிடமும் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. எந்த உறவானாலும் சரி, கொடுக்க மட்டும் பழகவேண்டும். உங்கள் தேவைக்கு, இறைவனிடம் கையேந்துங்கள். மனித உறவுகள் உங்களுக்கு இலவசமாக எதையும் தரஇயலாது. எதிர்பார்ப்பு இருக்கும் இடத்திலிருந்து எதைப் பெற்றாலும், அதை
திருப்பித் தரும் வரை அந்த உறவு தொடரும். தொடரும் உறவு பந்தத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும். பின் அது பிறவி தோரும் தொடரும். மனைவியோ, மகனோ, மகளோ, அண்ணனோ, தம்பியோ, யாரானாலும் கொடுத்து மட்டும் பழகவேண்டும். எதையும் எதிர்பார்க்கவேண்டாம். கொடுப்பதில் சந்தோஷப்பட பழகவேண்டும். உறவுகளிடம் இதை மிகவும் நாசூக்காக கையாளவேண்டும். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், இறைவனின் துணையால், காலப்போக்கில் சுலபமாகிவிடும். உறவுகளும் அறுந்து போகும். உறவுகள் விடுபட்டு போவது இயல்பாக இருக்கவேண்டும். அதில் உரசல்கள் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அவை வேறு பிறவிகளில் வேறு விதமாக தொடரும்.
எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும். யோகப்பயிற்சியும், இந்த முயற்சியும் தொடர்ந்தால், இறைவனின் அருளால் பந்த பாசங்களின் பிடியிலிருந்து விடுபடுவோம். முக்தியின் பாதை சுலபமாகும்.
-கேசவன்.