இந்த வலைப்பதிவில் தேடு

சிறகுகளை விரியுங்கள்!



நீண்ட நாட்களாகிவிட்டன இந்த வலைத்தளத்தில் என் இடுகைகளை பதித்து. இதனினும் முக்கியமான வேலைச் சுமை இருந்ததால் இயலவில்லை. முக்கியமான வேலை என்று நான் கருதியவை முடிந்துவிட்டதும் மீண்டும் எழுதுவதற்கு ஒரு காரணம்.

சென்ற 24ம் தேதியிலிருந்து என் குரலுக்கு ஓய்வு அளித்துவிட்டேன். மௌனத்தை கடைபிடிக்கிறேன். ஓரிரு நாட்கள் சிறமமாக தோன்றினாலும், இப்போது பழகிவிட்டது. எல்லாவற்றிற்கும் பழக்கம் தான் காரணம். என்னளவில் நான் அமைதியாக இருக்கிறேன். எண்ணங்கள் இலகுவாக ஒருங்கிணைகின்றன. கடலலைகளைப் போல் ஆர்ப்பரித்த மன அலைகள் சல சலத்தோடும் அருவியின் அலைகளைப்போல் வீரியம் குறைந்து காணப்படுகிறன. நல்ல முன்னேற்றம் தான்! மௌனத்தை நான் யாருக்கும் பரிந்துறைக்கவில்லை; காரணம் அது அவ்வளவு சுலப்மில்லை என்பதை உணர்கிறேன். காட்டில், மலையில், குகையில் தவமிருக்கும் யோகியருக்கு அது எளிதில் கைக்கூடலாம். உலக வாழ்க்கையில் இணைந்திருப்பவர்க்கு இது சற்று கடினமான செயல். நம் வைராக்கியத்தை சோதனைக்குட்படுத்தும் சோதனைக்கூடம். எனவே, மௌனத்தை விடுத்து, நான் சொல்லப்புகுந்த செய்திக்கு வருகிறேன்.

சமீபத்தில் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆன்மிக செய்திகளை பரிமாறிக்கொண்டிருந்தோம். மிகவும் சுகமாக சென்றுகொண்டிருந்த பரிவர்த்தனை, அவருடைய சொந்த வாழ்க்கைக்கு மாறியது. உறவுகளால் அவர் அனுபவித்துவரும் துயரங்களை கொஞ்சம் பகிர்ந்துகொண்டபோது, என் மனம் வருந்தியது. அதைக் கடந்து செல்லும் வழியை சொன்னேன். ஆனால் அவர் அதை ஆய்ந்தறியும் மன நிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். வேறொருநாள் வேறு சூழ்நிலையில் பேசவேண்டும் என நினைத்தேன். அப்போது தான் தோன்றியது, சொல்லவேண்டியதை அவருக்குமட்டுமே சொல்ல வேண்டுமா? இதுபோன்ற சூழலில் சிக்கி சோர்வடைந்திருக்கும் அனைவருக்கும் ஏன் சொல்லக்கூடாது என்ற எண்ணம் தான் இந்த இடுகைக்கான மூல காரணம். பயன் யாருக்கெல்லாம் கிடைக்கவேண்டுமென்றிருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் போய்ச் சேரட்டுமே இறைவன் அருளால் என்று எண்ணி சொல்ல துவங்குகிறேன்.

சிறகுகள்


பறவைகளுக்கு மட்டும் இல்லை சிறகுகள். நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன. அவற்றை விரித்துப் பாருங்கள். பிறகு வானம் வசப்படும். அது தான் உங்கள் எல்லை. உங்கள் கவலைகளெல்லாம் கண்ணுக்குப் புலப்படாமல் தரையில் தங்கிவிடும். எல்லையற்று விரிந்த வானமும், சில்லென்ற தூய காற்றும் உங்களை நிரந்தர ஆனந்தத்தில் மூழ்கடிக்கும்.

நான் சொல்வது, எழுத்தாளனின் கற்பனை போல் தோன்றுகிறதா? உண்மைதான். விண்வெளிப் பயணத்தைப் பற்றி கற்பனை செய்து கதை எழுதினார் அன்று ஒரு எழுத்தாளர். அவர் கற்பனை இன்று உண்மையானது. எல்லா கற்பனைகளும் ஒரு நாள் உண்மையாகும். நல்ல கற்பனைகள் உண்மையாக, இறைவன் துணையிருப்பான். அதைத்தான் டாக்டர் கலாமும் சொன்னார் கனவு காணுங்கள் என்று. நீங்கள் எதைப்பற்றி நினைக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள் என்று ரிஷிகேஷ் யோகி, மஹான் சிவானந்த சரஸ்வதி எழுதியிருந்ததை அவருடைய ஒரு புத்தகத்தில் படித்தது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. அவர் தான் என் முதல் குரு. அவருடைய வலிமை மிக்க, உயிரோட்டமான எழுத்துக்கள் தான் ஆரம்ப காலத்தில் என் யோகப்பாதைக்கு மிகவும் உதவியாக இருந்தவை. என் அன்பை அந்த மஹானின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

உங்களுக்கும் சிறகுகள் இருக்கின்றன. பறக்கலாம் என்று சொன்னேன். பறக்கலாம். பயிற்சி வேண்டும். பயிற்சியால் எதுவும் சாத்தியமே! யோகிகளும் அதைத்தானே செய்கிறார்கள். பயிற்சியின் மூலம் இறைத்தன்மையை அடைகிறார்கள்.

உங்களை பத்மாசனத்தில் அமர்ந்து சின் முத்திரை பிடித்து யோகப் பயிற்சி செய்யச்சொல்லவில்லை. அது வேறு. நான் சொல்ல வந்தது வேறு. என் அனுபவத்தைச் சொல்கிறேன். முடிந்தால் முயன்று பாருங்கள். நீங்களும் பறக்கலாம்.

முக்கியமான வேலை வந்துவிட்டது. இதன் தொடர்ச்சிஐ என் அடுத்த இடுகையில் காணுங்கள் வெகு விரைவில்.

அன்பின் பெயரால்,

கேசவன்.

உறவுகள்:

உறவுகள் சுமையாகிப் போவது எப்போது. எதிர்பார்ப்பு என்பது முளைவிட ஆரம்பிக்கும் போது தான். அடுத்தவர் விருப்பத்திற்காக ஒன்றைச் செய்யவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படும் போது தான்.

இயல்பிலேயே சுதந்திரமாக கட்டற்றிருந்த ஆன்மா, உயிர், ஜீவன்; ஆத்மா, பரமாத்மா; எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளூங்கள். என்ன சொல்லி அழைத்தாலும் அது அதுவாகத்தான் இருக்கும் ஷேக்ஸ்பியர் சொன்னது போல: "call it by any name, rose smells the same". என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் ரோஜாவின் மணம் மாறாது என்பது போல. மாற்றமில்லாத 'அது' மனம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டதும் மாற்றத்துக்கு உட்படுவது போல் மாய தோற்றமளிக்கிறது. மாற்றம் என்பது மனம் சார்ந்தது. தேவைகள், ஆசை, பாசம், விருப்பம், வெறுப்பு, கோபம், இன்பம், துன்பம், காமம், சுகம், துக்கம், இவை அனைத்தும் மனம் சார்ந்தவை. எனவே இவை மனத்தில் தான் இருப்பு கொள்கின்றன. எனவே சுமை என்பது மனத்துக்குத்தான். மனத்தை விட்டு மேலே செல்லும் வித்தையைக் கற்றுக்கொண்டால், சுமை விலகிப் போகும், ஆனந்தம் ஆட்கொள்ளும்.

ஒரு பாத்திரம் ஏற்று நடிக்க வந்த பிறகு, நடிப்பதில்தான் கவனமாக இருக்க வேண்டும். பாத்திரமாகவே மாறிவிடக்கூடாது. பாத்திரமாகவே மாறிவிட்டால், நாடகம் தொடர்ந்துகொண்டுதானிருக்கும், தற்கால 'மெகா' தொடர் போல. 'இது நாடகம்' என்னும் உணர்வு எப்போதும் மனதில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது தான் விழிப்புணர்வு. இந்த விழிப்புணர்வு எப்படி சாத்தியமாகும்? இடையராத தியானத்தின் மூலமும், அடிக்கடி நமக்கு நாமே நினைவுறுத்திக் கொள்வதன் மூலமாகவும் இதை கையாளலாம். கதி ஒன்றுதான் காப்பாற்றும். இது நாடகம் என்பதை நினைவூட்டும். எந்த மனம் ஆத்மாவில் லயிக்க விடாமல், அதைவிட சுகம் இதோ நான் தருகிரேன் என்று ஏமாற்றி நம்மை (நம்மை என்று நான் குறிப்பிடுவது, வினைப்பயன்களால், வாசனைகளால் உருவான ஆணவத்தைத் தான். ஆணவம் தான், ஆன்மாவிலிருந்து பிரித்து தன்னை தனியாக அடையாளம் காண முற்படுகிறது) பந்தத்தில் கட்டிப்போடுகிறதோ, அந்த மனத்தையே உபயோகப்படுத்தி அதனிடமிருந்து விடுதலை பெரும் வழியை நமக்கு காட்டுவது தான் வாசி யோகம். முள்ளை முள்ளால் எடுப்பது போல், மனதை மனதால் தான் அழிக்க வேண்டும். முள்ளை எடுத்த்தும் எடுக்க உதவிய முள்ளையும் வீசி எறிவது போல, அழிக்க உதவிய மனத்தையும் அழித்துவிட வேண்டும். அந்த வேலையையும் அந்த மனமே செய்துவிடும். காரணம் ஒரு கால கட்டத்தில், ஒரு நிலையில் அது தன் செயல்களால் சலித்து ஒய்ந்துவிடும். அப்போது தான் அது தன்னையே அழித்துக்கொண்டு, இதுகாறும் தன்னால் மறைக்கப்பட்டிருந்த ஆன்மாவின் விடுதலைக்கு வழிவிட்டு தன்னையே அழித்துக்கொள்கிறது.

அணு ஆயுதங்களைவிட சக்திவாய்ந்த மனத்தை வெல்ல நம்மிடமிருக்கும் ஒரே ஆயுதம் 'வாசி' ஒன்றுதான்.

பரம்பொருளிலிருந்து பிரிந்து என்ன காரணத்துக்காகவோ பூமியில் பிறவியெடுத்துவிட்ட ஒவ்வொருஜீவனும் ஒரு நாள் நிச்சயம் விடுதலை பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அந்த நாடைமுறையை எப்படி துரிதப்படுத்துவது என்பதைத்தான் குருநாதன் மூலம் இயக்கிவைக்கப்பட்ட வாசியோகம் நமக்கு போதிக்கிறது. பிறவி எடுத்ததும் உறவுகளில் சிக்கிக்கொள்ளும் ஆணவம், அதை மேலும் மேலும் வளர்த்துக்கொள்கிறது. பிறவிதோறும் அது பெறுக்கம் கொள்கிறது.

சங்கிலித்தொடர் போன்ற உறவுகளிலிருந்து அந்த உறவுகளும் பாதிக்கப்படாமல் எப்படி விடுபடுவது? அதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது. குருநாதர் சொல்லியிருக்கிறார்,"பாசம், பந்தப்படுத்தும்; அன்பு விடுவிக்கும்" என்று. அது தான் தீர்வு. சுலபம் என்று நான் சொல்லவில்லை. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்கிரேன். முதலில், பாசத்திற்கும், அன்புக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரே வரியில் இதற்கு விளக்கம் சொல்லவேண்டுமானால், பாசத்தில் எதிர்பார்பு இருக்கும். அன்பில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மிக உயர்ந்த்தாக கருதப்படும் தாய்ப்பாசத்தில் கூட எதிர்பார்ப்பு இருக்கிறது என்று கூறுவேன். "இவனை வளர்த்து ஆளாக்கினால்,என் கடைசி காலத்தில் இவன் என்னைக் காப்பற்றுவான்" என தாய்மார்கள் பேச்சுவழக்கில் கூறுவதை கேட்டிருப்பீர்கள். பாசத்தின் அடையாளம் அதுதான். அன்பில் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. தேவையான நேரத்தில தேவையானதை கொடுக்கும். அன்பு தராதரம் பார்ப்பதில்லை, அன்பிற்கு ஏழை- பணக்காரன் இல்லை. படித்தவன் - அறிவிலி என்ற பேதமில்லை. ஆதவனின் ஒளியைப் போல் அது எல்லோருக்கும் கிடைக்கும். அதற்கு விலைதர வேண்டாம். பாசத்திற்கு விலை தர வேண்டும். சரி, விளக்கம் போதும். இதை எப்படி செயல்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.

முதல் படியாக, யாரிடமும் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. எந்த உறவானாலும் சரி, கொடுக்க மட்டும் பழகவேண்டும். உங்கள் தேவைக்கு, இறைவனிடம் கையேந்துங்கள். மனித உறவுகள் உங்களுக்கு இலவசமாக எதையும் தரஇயலாது. எதிர்பார்ப்பு இருக்கும் இடத்திலிருந்து எதைப் பெற்றாலும், அதை
திருப்பித் தரும் வரை அந்த உறவு தொடரும். தொடரும் உறவு பந்தத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும். பின் அது பிறவி தோரும் தொடரும். மனைவியோ, மகனோ, மகளோ, அண்ணனோ, தம்பியோ, யாரானாலும் கொடுத்து மட்டும் பழகவேண்டும். எதையும் எதிர்பார்க்கவேண்டாம். கொடுப்பதில் சந்தோஷப்பட பழகவேண்டும். உறவுகளிடம் இதை மிகவும் நாசூக்காக கையாளவேண்டும். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், இறைவனின் துணையால், காலப்போக்கில் சுலபமாகிவிடும். உறவுகளும் அறுந்து போகும். உறவுகள் விடுபட்டு போவது இயல்பாக இருக்கவேண்டும். அதில் உரசல்கள் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அவை வேறு பிறவிகளில் வேறு விதமாக தொடரும்.

எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும். யோகப்பயிற்சியும், இந்த முயற்சியும் தொடர்ந்தால், இறைவனின் அருளால் பந்த பாசங்களின் பிடியிலிருந்து விடுபடுவோம். முக்தியின் பாதை சுலபமாகும்.

-கேசவன்.

உறவுகள்

ஒரு குறிக்கோளின்றி உட்கார்ந்து கொண்டு தொடுவானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் அதன் வசத்தில் அலைந்துகொண்டிருந்தது. அதன் ஓட்டத்தை வெறுமே கவனித்துக் கொண்டிருந்தேன். அது உறவுகளைப் பற்றி ஆராய ஆரம்பித்தது. முதல் கேள்வி தோன்றியது. இங்கே என் உறவுகள் யார், யார்? யோசித்தேன். யாருமில்லை என்றே தோன்றியது. இதுநாள் வரை யாரெல்லாம் என் உறவு என்று எண்ணியிருந்தேனோ அவர்கள் யாரும் எனக்கு உண்மையில் உறவில்லை என்பது புரிந்தது. எனக்கு உறவு என்று யாருமில்லை, ஆனால் என்னை உறவு என்று சொல்லிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உறவு உடல் சார்ந்தது- என்னிடமுள்ள உலகியல் பொருள்கள் சார்ந்தது. என் உறவுகள் என்பது எது? பல பிறவிகளைக் கடந்து இன்றும் பயணித்துக்கொண்டிருக்கும் இந்த ஆன்மாவைச் சார்ந்தது. இந்த உடலை விட்டால் இந்த ஆன்மா எங்கு சென்று தங்குமோ அந்த உலகைச் சார்ந்தது. அந்த உறவுகள் இங்கும் இருக்கின்றன; ஆனால் அருகில் இல்லை. ஒரு சிலர் அதைப் புரிந்துகொண்டும் தாமரையிலைத் தண்ணீராக இருக்கிறார்கள். பலருக்கு புரியவில்லை. மாயையால் மறைக்கப்பட்ட கண்களூடாகப் பார்க்கிறார்கள். எந்த பிறவியிலும் தொடரும் ஒரு உறவு இப்போது இங்கிருந்தாலும், எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. மற்ற உறவுகளுள் பெரும்பாலானவற்றிற்கு இந்த உறவு பற்றிய ஞானம் இல்லை.


இது ஒரு விச்சித்திரமான வாழ்க்கை. ஒன்று மட்டும் புரிகிறது. கீழேவந்துவிட்டால், இந்த உடலை விடும் வரை வந்த இடத்தைப் பற்றிய ஞானம் இருக்கக் கூடாது. அதை உணர்த்திவிட்டார்களென்றால், பிறகு இவ்வுலக யதார்த்த வாழ்க்கை ஒரு இமாலயப் பயணம் போல் சுமையாகிவிடும். இதைத்தான் ஆங்கிலத்தில் அழகாக சொன்னார்கள் "Living between two worlds" என்று. இப்போது என் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகிவிட்டது. இது இரட்டை குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணிப்பதற்கு ஒப்பானதாகும்.

சரி; இதை நான் எப்படி கையாளுகிறேன்? எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறதா? ஆம்! இல்லை! இரண்டுமே என் பதில்கள் தான். முரண்பாடு! உண்மையான என் உறவுகளைப் பற்றிய வெளிப்பாடு, என்னை மகிழ்ச்சியடைய செய்கிறது. மெய்போலவும் பொய்யான இந்த உலக வாழ்க்கையைப் பார்க்கும் போது, பிடிக்கவில்லை. இதிலிருந்து தப்பித்து மேலே போய்விடவேண்டும் என்ற உணர்வு மேலோங்குகிறது. இதை என் விருப்பத்திற்குத் தகுந்தாற் போல் திருத்தியமைத்துக் கொள்ளும் சக்தி எனக்கிருக்கிறதா என்றால்,இல்லையென்று தான் நினைக்கிறேன். இல்லாமல் போனதற்கும் நான் தான் காரணம். என்னை முழுமையாக அவன் கமல பாதங்களில் சமர்ப்பித்துவிட்ட பிறகு எனக்கு என்ன தகுதியிருக்கிறது ஒன்றை விரும்புவதற்கும், வெறுப்பதற்கும்? அவன் விருப்பமே தன் விருப்பமாக வாழத் துணிந்தபின் கருவிக்கு என்று தனிப்பட்ட விருப்பமிருக்கலாமா?

மீண்டும் மனம் உறவுகள் பற்றி சிந்திக்கிறது. ஒரு காலத்தில் எப்படியிருந்தேன் நான்! எப்படியாகிவிட்டேன் இப்போது என்று நினைக்கிறது. ஆம்! உண்மைதான். சிறு வயதிலிருந்தே என்னைச் சுற்றியிருந்தவர்கள் பால் நான் மிகவும் ஆழ்ந்த பாசமும், நேசமும் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரையும் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நேசித்தேன். அதை வெளிப்படுத்திக் கொண்டது சிலரிடம் மட்டும் தான். மற்றவர்கள் பார்வையில் நான் ஒரு முரடனாக, கடின மனம் கொண்டவனாக, மென்மையான உணர்வுகள் அற்றவனாக இருந்திருக்கலாம். நான் நேசமாகப் பழகிய அத்தனை பேரும் என்னிடம் பாசமாகத்தான் இருந்தார்கள்,என் மனைவி மக்கள் உட்பட. சமீப காலம் வரை அதை உண்மை என்று தான் மனம் எண்ணிக்கொண்டிருந்தது.

அப்படியானால், இந்த மாற்றம் எப்போது ஏற்பட்டது? என் மூலம் எதுவென்று எனக்கு தெரிந்த நாள் முதலா? இல்லை என்று தான் சொல்வேன். காரணம், அந்த வெளிப்பாட்டால் என் பயணத்தின் ஒரு புதிய பரிமாணத்தைத்தான் கண்டேன். அது நான் இவர்கள் பால் கொண்டிருந்த நேயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பின் எது என்னை இவர்களுடைய பாசத்தை, நேசத்தை பகுப்பாய்வு செய்து இது எதிர்பார்ப்பில் வாழும், பலமற்ற, காலத்தால் அழிந்து போகக்கூடிய் ஒரு மன உணர்வு என்று உணர்த்தியது? இந்த உறவுகள் ஒரு எதிர்பார்ப்பில் நிலைக்கும் பண்டமாற்று வியாபாரம் என்பதை நான் உணர ஒரு சந்தர்ப்பம் என் குருநாதனால் எனக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பிறகு தான். அந்த சூழ்நிலையும் சந்தர்ப்பமும் என்ன என்று நான் விளக்கப்போவதில்லை. விளக்கினால், அது மற்றவர்களுடைய தனிப்பட்ட மன உணர்வுகளை அலசி ஆய்வு செய்யும் அநாகரிகச் செயலாகிவிடும்.

அந்த உண்மையின் வெளிப்பாட்டில் நான் அதிர்ந்து போனேன், உடைந்து போனேன், நிலைகுலைந்து விழுந்துவிட்டேன். என்ன அந்த வெளிப்பாடு? எல்லா உறவுகளும் ஒரு எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான் இயங்குகின்றன; தாயின் உறவையும் சேர்த்துத் தான்! உலகியல் உடமைகளுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், எதிர்பார்ப்பில் இணைந்து வாழும் இந்த உறவுகளில் பலமில்லை, உறுதியில்லை. கொடுக்கும் வரை தான் இருக்கும். இல்லையென்றால் எல்லா உறவுகளும் இல்லையென்றாகிவிடும். இது தான் உண்மை. இதை நேருக்கு நேர் சந்தித்ததால் நான் நிலை தடுமாறிவிட்டேன். யாரை நான் எல்லா உலகியல் நியதிகளையும் தாண்டி தீவிரமாக நேசித்தேனோ அந்த உறவு காரணமின்றி என்னை வார்த்தை ஈட்டிகளால் துளைத்தெடுத்த போது ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்துவிட்டேன். அதைத் தாங்கும் சக்தியின்றி தவித்தேன். என் தந்தை, என் குருநாதன், என் நிலை அறிந்து என்னை இந்நிலையில் இருந்து மீட்டான். நான் மீண்டும் தூக்கி நிறுத்தப்பட்டேன். தாமரையிலைத் தண்ணீராக வாழத் தயாராக்கப்பட்டேன். கொடுக்க மட்டுமே தெரிந்திருந்தால் போதும் என்று புரிந்து கொண்டேன். கொடுப்பதில் சுகமிருப்பதை உணர்ந்தேன். எதிர்பார்ப்பை விட்டதால், ஏமாற்றமில்லை, இழப்பதற்கு ஏதுமில்லை, சோகமில்லை. ஆனால் மனம் காலியான பெருங்காய பெட்டகத்தில் தொடரும் வாசத்தை ஒத்த நிலையில் அந்த நினைவுகளில் இருந்து முழுவதுமாக விடுபட லேசான எதிர்ப்பைக் காட்டுகிறது. ஆனால் அது என் குருநாதன் அடிக்கடி சொல்வது போல் ஒரு ‘பிரச்சினை இல்லை’. இந்த நிலையில், உறவுகளையும் தாண்டி மனம் அமைதியில் நிலைக்கிறது. என் ஆன்மிகத் தந்தைக்கு கண்ணீர் மல்க நன்றி சொல்வதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை எனக்கு. என் பிறவிகள்தோறும் எத்தனையோ தாய்களின் உருவத்தில் என்னைப் பாதுகாத்து, அரவணைத்து, தூக்கிச் சுமக்கும், ஒரு கணமும் எனை நீங்காமல் எப்போதும் உடனிருக்கும் அன்னை பராசக்திக்கும் நன்றி!

எங்கோ அலைந்து கொண்டிருந்த மனம் விழித்துக் கொண்டு தன்னை யாரோ கவனிப்பதை உணர்ந்து என் முன் ஒரு நொடி அசையாமல் நின்றது. அந்த அசைவற்ற நொடிகளை சேகரிக்க முனைகிறேன்.

கேசவன்

நான் கடந்து வந்த பாதை.

நண்பர்களே,

என் முந்தய பதிவுகளை படித்ததும் ஒரு கதை படித்தது போன்ற உணர்வு ஏற்பட்டதா?

ஆச்சரியமொன்றுமில்லை. சில சமயம் நானே அப்படி உணர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையே ஒரு சுவாரசியமான கதை போல் தான் இருக்கிறது.

தொடர்ந்து என் அனுபவங்களை படித்துவருவீர்களேயானால், நிழல்....நிஜமாகும்....என் அனுபவங்கள் உங்கள் கண்களை மறைக்கும் மாயத்திரையை இற்று விழச்செய்யும். உண்மையின் தரிசனம் ஒரு நாள் உங்களுக்கும் கைகூடும். கைகூடவேண்டும் என்பது என் பிரார்த்தனை!

பூமியில் கண்ணன், ராமன், ஏசு வாழ்ந்த போது, அவர்களை உண்மையாக அறிந்தவர்கள் மிகச்சிலரே.

பிரபஞ்ச சக்தி மானுடத்தின் உறக்கம் கலைக்க எண்ணி உடலெடுத்து மண்ணில் கால்பதிக்கும் போது அதை இனம் காணுவது மிகச்சிரமம். இனம் கண்டுகொண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்றே கொள்ள வேண்டும். இது சம்மந்தப்பட்ட ஆனந்த ஜோதியின் பாடல் வரிகள்
என் நினைவுக்கு வருகிறது.

"வானிலிருந்தால் வாவென்றழைப்பதும்,
வையகம் வந்தால் இனம் காண மறுப்பதும்
மானுடமைய்யா, மாறுதல் இல்லை"

யதார்த்தத்தின் இயலாமையை தோலுரித்துக்காட்டும் வரிகள்!

மண்ணில் வாழ்ந்த அந்த மஹா சக்தியின் பிரதிகள் (இறை தூதர்கள் எனவும் கொள்ளலாம்) எந்த மதத்தையும் தோற்றுவிக்கவில்லை. மதத்தைத்
தோற்றுவித்தவன் மதம் பிடித்த மனிதன் தான். எனவே நான் எந்த மதத்தையும் சார்ந்தவனில்லை. என் குரு அழைத்தபோது சம்மதித்து அவர் பாதையில் நடப்பதால் எனக்கு எம்மதமும் சம்மதமே!

மதத்தைச் சார்ந்திருப்பதும் ஒரு நிலையே. உதாரணத்துக்கு சொல்வோமானால்; ஆறாம் வகுப்பு மாணவனுக்கு பத்தாம் வகுப்பு மாணவனின் கணக்குப் பாடம் புரியாது. அது அவன் தவறல்ல. அவன் கற்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது என்பது தான் உண்மை. எனவே மதத்தைச் சார்ந்திருப்பதும் ஒரு நிலைதான். அதையும் கடக்கவேண்டும். யோக சாதனை அதற்கு உதவும்.

நான் இரண்டு வலைத்தளங்களை உருவாக்கினேன். முன்பே இருந்த ஒன்றையும் சேர்த்து மூன்று வலைத்தளங்களை நான் நிர்வகித்து வருகிறேன். அவை: http://ourguru.net/, http://anandjothi.info/, http://anandavallal.com/.

முன்னணி வலைத்தளங்களைப் போல் ஆயிரமாயிரம் பார்வையாளர்கள் இந்த வலைத்தளங்களைக் காண வேண்டும் என்பது என் நோக்கமல்ல. யாருக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறதோ அவர்கள் இங்கே வருவார்கள் என நான் அறிவேன். அது இறைவனின் பொறுப்பு. இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றே நினைக்கிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இறை தேடலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதும் அல்லது விலகிச்செல்வதும் அவரவருடைய ஆர்வம் அல்லது ஆர்வமின்மையைப் பொருத்தது.

ஒவ்வொரு ஆன்மாவும் தன்  தொடர் பயணத்தில் என்றாவதொரு நாள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிச்சயமாக மேலே வரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

இந்த தளத்தில் நான் நிறைய எழுதப்போகிறேன். நான் கடந்து வந்த பாதையில் எனக்கேற்பட்ட அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், எண்ணங்கள், உணர்வுகள், மகிழ்ச்சிகள், வலிகள், பாதையில் ஏற்பட்ட தடைகள், அவற்றை தகற்றெறிந்து பாதையில் பயணிக்கும் ரகசியம் போன்ற எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

வாழ்க்கையின் பெரும் பகுதியை தேடலில் கழித்த எனக்கு, என் போன்ற தேடலில் முயல்வோருக்கு உதவ எண்ணும் என் முயற்சிதான் இந்த வலைத்தளங்கள்.

நான் சார்ந்திருக்கும் ஆனந்த்ஜோதி அமைப்பு வியாபார நோக்கம் கொண்டதல்ல. நூறு சதவிகிதம் ஆன்மிக ஊக்குவிப்பு தான் எங்கள் நோக்கம், செயல்பாடு எல்லாம். பணம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.  இங்கே எதிர் பார்ப்பற்ற உதவி கிடைக்கும். முயன்று பாருங்கள். தொடர்புக்கு வலைத்தளங்களில் மின்னஞ்சல் முகவரிகளும், தொலபேசி எண்களும் உள்ளன.

என்போன்று ஆன்மிக தாகத்தில் தவிப்போர்க்கு ஓரளவாவது உதவ முடிந்தால் அதை என் பாக்கியமாக கருதுவேன்.

மீண்டும் தொடர்வேன்.

கேசவன்.

தேடலில் துவங்கி….விடியலை நோக்கி….

விடியலைத் தேடி தொடரின் நிறைவு பாகம்....

அதன் பின் சில நாட்கள் கடந்தன. ஒரு நாள் திருமதி ஷோபனா விடமிருந்து போன் கால் வந்தது. சந்தோஷ அதிர்ச்சியைத் தரும் மிக மகிழ்ச்சியான ஒரு செய்தியைச் சொன்னார்கள். திருமதி நந்தினி சத்யமூர்த்தி என்பவர், அவர் கணவர் திரு ரவி அவர்களின் சகோதரி, நம் டாக்டரை, புரசைவாக்கத்தில் 31.01.1997 மதியம் 1.45 மணி அளவில் ஹோட்டல் சரவண பவன் அருகில் நின்று கொண்டிருந்ததை மிகத் தெளிவாக, எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி, நேருக்கு நேர் பார்த்திருக்கிறார். இந்த இடத்தில் திருமதி நந்தினி பற்றி ஒரு குறிப்பு மிக அவசியமாகிறது. டாக்டர் எனச் சொல்லக்கேட்டாலே உருகிப்போகும் நம்மிடையே, திருமதி நந்தினி அவர்கள் டாக்டரிடம் அவ்வளவு ஈடுபாடில்லாதவர். மனத்தளவில் அவரை ஒரு குருவாக ஏற்றுக் கொண்டவரில்லை. அவரை,வருவார் என எதிர்பார்த்திருப்பவரும் இல்லை.

இப்படிப்பட்ட மன நிலையுள்ள ஒருவர் முன், விபத்தில் சிக்கி உயிர் இழந்துவிட்டவர், அரசுப் பொது மருத்துவ மனையில் post mortem செய்யப்பட்டு, 'இறந்து விட்டார்' எனச் சான்றிதழ் அளிக்கப்பெற்று, முறைப்படி சடங்குகளை செய்து, அடக்கம் செய்யப்பட்டவர்,(செய்தித்தாள்களில் அவர் மறைவு பற்றிய செய்திகள் வெளிவந்தன) அதே டாக்டர் தன் முன் ரத்தமும், சதையுமாக, பட்டப்பகலில் வந்து நின்றால், அவர் நிலை எப்படி இருந்திருக்கும்?! ஓரிரு வினாடிகளில் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, சாலையின் மறு பக்கம் நின்று கொண்டிருந்த அவரை நோக்கி விரைந்தார். சாலையைக் கடக்கும் முயற்சியில், குறுக்கே வந்த வாகனங்களால் கவனம் சற்றுச் சிதறுண்டு, ஒருவாறு அவர் நின்றிருந்த இடத்தை அடைந்த போது, அங்கே டாக்டரை காணவில்லை. கூட்டத்தில் எப்படி மறைந்தாரோ! நந்தினிக்கு இப்படி அவர் காட்சி தந்தது, முன்பு ஒரு முறை, “நான் சுதந்திரப்பறவை” என்று குறிப்பிட்ட அதே 31.01.1997 ம் நாள். நாங்கள் மேலே விவரிக்கப்பட்ட பயணத்தைத் தொடங்கிய நாள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அதே புரசைவாக்கத்தில், செங்கல் சூளை ரோடில், புதிதாய்க் கட்டி முடிக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் வாயிலில், அம்பேத்கர் சிலை அருகில் டாக்டர் நின்றிருந்ததை நந்தினி அவர்கள் மீண்டும் ஒரு முறை பார்த்திருக்கிறார்கள். இம்முறை அவர்கள் காரில் சென்று கொண்டிருந்ததால், காரை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்ப்பதற்குள் அவர் அங்கில்லை. இவரே டாக்டரை இரண்டு முறை பார்த்துவிட்டார் ஒரு மாத இடை வெளிக்குள்.

இதைத் தொடர்ந்து, ஜானகிராமனின் மகன் ஸ்ரீராம், தன் வீட்டிற்கு வரும் போது, யாரோ தன்னைப் பின்னாலிருந்து பார்ப்பது போன்ற உணர்வால் உந்தப்பட்டு, திரும்பிப் பார்த்த போது, டாக்டர் T.V.S.50 வாகனத்தில் இவரைத் தாண்டி சென்று மறைந்து விட்டாராம். பார்த்த இடம்; அண்ணா நகர், ஜானகிராமன் வீட்டருகில்.

இதற்குப் பிறகு தேடல் தீவிரப் படுத்தப்பட்டு, பல சாட்சியங்கள் கிடைத்தன. புரசைவாக்கத்திருக்கும் ‘டானா’ தெருவிலுள்ள ஒரு சிறு டீக் கடையில் டாக்டர், காலையில் பூரியும், இட்லியும் பார்சல் வாங்கிப் போனதைக் கேள்விப்பட்டு, நாங்கள் போய்க் காத்திருந்தோம். அன்றும், அதன் பிறகும் டாக்டர் அங்கு வரவில்லை. ஆனால் பால் வினியோகம் செய்யும் கடைக்காரர் ஒரு முறை பார்த்திருக்கிறார். அந்த பகுதியில் வாழும் இளைஞர்கள் சிலர் பார்த்திருக்கிறார்கள். பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள மடத்தில் வசிக்கும் சாது ஒருவர் டாக்டரை,அந்தக்காலக் கட்டத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறார். புவனேஸ்வரி சினிமாவுக்கெதிரில் இருக்கும் கடையில் வேலை செய்யும் சுமார் பத்து வயது சிறுவன் ஒருவன், நாய்க் கடிக்கு வைத்தியம் பார்க்க சென்ற இடத்தில், இந்த டாக்டர் தான் தன்னை அரசாங்க மருத்துவ மனைக்குச் செல்லும்படி சொன்னதாக உறுதியாகக் கூறுகிறான். ஆனால் அவன் சொன்ன கிளினிக்கில் பார்த்த போது, அங்கே வேறொரு டாக்டர் இருந்தார். இந்த மாயவனின் விளையாட்டை யாரால் புரிந்து கொள்ள முடியும்!

ஈஸ்டர் ஹில்லை நோக்கி அன்று பயணித்ததற்குப் பிறகு, பல இரவுகள்......பல விடியல்கள். ஆனால் எங்கள் தேடல் பயணம் தொடர்கிறது........என் வாழ்வில் விடியலுக்காக இன்னும் காத்திருக்கிறேன். மேலே நீங்கள் படித்தது, நான் 1996 ல் சில, பல அனுபவங்களுக்குப் பிறகு Voice of Anandajothi இதழில் எழுதி மூன்று பகுதிகளாக வெளி வந்த தொடர்.. அதில் சில திருத்தங்களுடன் மேலே கொடுத்துள்ளேன். அத்துடன் முடிந்துவிடவில்லை எங்கள் தேடல். பயணங்கள் தொடர்ந்தன. சுமார் இரண்டாண்டு காலம் எங்கள் தேடல் பயணங்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகள் மட்டுமின்றி வெளி மானிலங்களிலும் தொடர்ந்தன. உள்ளும் புறமும் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகள், வழிகாட்டுதல்களின் துணையுடன் தேடல்கள் தொடர்ந்தன. எல்லாப் பயணங்களும் எங்களைப் பொருத்தமட்டில், டாக்டரை நேருக்கு நேர் பார்க்க முடியாமலே முடிந்தன. ஆனால் பார்த்தவர்களின் சான்றுகள் மலை போல் குவிந்தன. இந்தப் பயணங்களால் எங்களுக்குக் கிடைத்த ஆன்மிக அனுபவப் பொக்கிஷங்கள் ஏராளம்............... ஏராளம். இதே பக்கத்தில் என் குருநாதனின், நிஜமாக இருப்பவரின்  நிழல் படம் இருக்கிறது. நிஜத்தை நேரில் காணும் நாளுக்காக காத்திருக்கிரேன்.

இந்தத் தொடர் தொடரும். எல்லா அன்பர்களும் 'வாய்ஸ் ஆஃப் ஆனந்த ஜோதி' யின் எல்லா இதழ்களையும் படிப்பார்கள் என்று எதிர் பார்ப்பது சாத்தியமில்லை. எனவே, மேலே உள்ள கட்டுரையை ஆரம்பமாகக் கொண்டு, தொடர்ந்து இந்த வலைத்தளத்தில் எழுதவுள்ளேன். நான் மட்டுமல்லாது, இந்த தேடல்களில் பங்கு பெற்ற மற்ற சகோதர சகோதரிகளும் எழுதுவார்கள் என எதிர் பார்க்கிறேன்.

இன்னும் வரும்.........

கேசவன்

தேடலில் துவங்கி….விடியலை நோக்கி…பாகம் 5

விடியலைத் தேடி தொடரின் ஐந்தாம் பாகம்....

அந்த மலை மீது நிறுவப்பட்டிருக்கும் சிலுவையானது, 1939 ம் ஆண்டு, மதுரையைச் சேர்ந்த ஒருவர், தன் மனக்கண்ணால் (அகக் காட்சி) பார்த்து, இந்த இடத்தைத் தேடி கண்டுபிடித்து இந்த சிலுவையை நிறுவினாராம். இந்த குன்றிற்கு ஈஸ்டர் ஹில் என்று பெயர். இதில் நாம் நினைவு கூரத்தக்க முக்கியமான செய்தி என்னவென்றால், டாக்டர் பிறந்த ஆண்டும் 1939 தான். என்ன ஒற்றுமை! அந்த இடத்தை விட்டகலும் போது, தாயைப் பிரியும் சேயைப் போல கனத்த மனதுடன் பயணத்தைத் தொட்ர்ந்தோம். தேவனின் பாதம் பதிந்த இடம். அவன் பாதம் போன பாதை தெரியாமல் மனம் தவித்தது. குறடு மலை கோவிலை அடைந்தோம். அங்கு நான்கு யுகங்களாக மோனத்தவத்தில் வீற்றிருக்கும் தும்பிக்கையாழ்வாரை தரிசித்துவிட்டு, அந்தர் கங்காவுக்குப் புறப்பட்டோம்.

அந்தர் கங்காவில் மதிய உணவருந்தியப் பின் அங்கிருந்து கோலாருக்கருகிலிருக்கும் மாரிக்குப்பம் நோக்கிப் பயணமானோம். மாரிக்குப்பம் சிவாலயத்தில் சிறிது நேரம் தியானம் செய்து சிவசக்தியின் அன்பில் நனைந்த பின் அருகிலிருக்கும் ஒரு விஷ்ணு விக்ரகத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இந்தச் சிலையின் பின்னே ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது. டாக்டர் கோலாரிலிருந்த சமயம், தன் துணைவியாருடன் இந்த சிவாலயத்துக்கு வந்த போது, வெண்ணிற புஷ்பத்தை சிவனுக்கு சார்த்தக்கூடாது என்பதைக் கேட்டு, கையிலிருந்த வெண் மலர்களை வீசி எறிந்தாராம். அம் மலர்கள் விழுந்த இடத்தில், அவை தானே அசைவதைக் கண்ட டாக்டர், அங்கிருந்த சிறுவர்களை அழைத்து, அவ்விடத்தைத் தோண்டச் செய்தாராம். மண்ணுக்கடியில் இவ் விக்ரகம் இருக்கக் கண்டு, அதை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்தாராம். இபோது அதைச் சுற்றி கருங்கல் பலகைகளால் சுவரும் கூரையும் வேயப்பட்டுள்ளது. பூசை நடப்பதற்கான அறிகுறிகளும் தெரிந்தன. நட்டக் கல் பேசுமோ என்னவோ! ஆனால் கூத்தன் அருகிலிருந்தால், தரையில் விழுந்த மலர்களும் கூத்தாடும் என்பது புரிந்தது.

இருட்டிய நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு, இரவு குறடு மலை வந்தடைந்தோம். இரவு, கோவில் பிரகாரத்தில் தங்கினோம். இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது. இதை அவசியம் குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன்.

இரவுச் சாப்பாடுக்கு, நாங்கள் கொண்டுவந்திருந்த உணவு ப் பண்டங்களில், கொஞ்சம் சப்பாத்தியும், கொஞ்சம் தயிர் சாதமும், சிறிது புளியோதரையும் மிச்சமிருந்தது. தயிர் சாதப் பாத்திரத்தைத் திறந்ததும் அதுவும் புளியோதரையுடன் போட்டியிடுவதை நாசி உணர்த்தியதும் திருமதி ஷோபனா ஒரு கரண்டியை எடுத்தார்கள். புளியாய் மாறிவிட்டிருந்த அந்தத் தயிர் சாதத்தில் விட்டு ஒரு கலக்குக் கலக்கினார்கள்; பிறகு அதிலிருந்து எல்லோருக்கும் ஒரு கரண்டி சாதம் இலையில் இட்டார்கள். நான் புளிப்பு, காரம், உப்பு அனைத்தும் மிகக் குறைவாக சாப்பிடும் பழக்கமுள்ளவன். என் இலையிலும் ஒரு கரண்டி சாதம் விழுந்தது. தயக்கத்துடனேயே சிறிதளவு எடுத்து வாயிலிட்ட நான், ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஸ்தம்பித்துவிட்டேன். புளிப்பு அறவே இல்லை. தயிர் சாதம் அப்படி ஒரு ருசி! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என ஒரு வாக்கியம் உண்டு. இந்த அனுபவம் தந்த இன்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மீண்டும் மகிழ்கிறேன்.

மறு நாள் புறப்பட்டு, சித்தூர் வழியாக திருப்பதி சென்று, சீனிவாசமங்கா புரத்திலிருக்கும் பெருமாளை தரிசித்துவிட்டு, மேலே சென்று ஆகாச கங்கா, பாப வினாசனம் தீர்த்தங்களைப் பார்த்துவிட்டு, இரவு சுமார் பத்து மணி அளவில் வீடு திரும்பினோம்.

அன்று அந்த பயணம் மீண்டும் ஒரு முறை டாக்டரைக் காணாத ஏக்கத்தில் முடிவுற்றது.

தொடரும்....

கேசவன்